" கரும்பு தந்த தீஞ்சாறே , கனி தந்த நறுஞ்சுளையே ,கவின் முல்லை
அரும்பு தந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே அன்பே " என்கிறார் பாரதிதாசன் .
அப்பப்பா என் தாய்மொழி தமிழில் தான் எத்தனை இன்பம் , எத்தனை சுவை . உலகத்தின் மிகச்சிறந்த மொழியான தமிழ், என் தாய்க்கு நிகரான மொழி .
குழந்தை பிறந்தவுடன் அறியும் முதல் உறவு தாய் தான். தாய் சொல்லி தான் குழந்தை, உலகத்தை அறியும். ஒரு தாய், தன் தாய்மையை முழுமையாய் உணரும் தருணம் எது தெரியுமா? தன் செல்வச் குழந்தை தன்னை "அம்மா " என்று அழைக்கும் தருணமே. இப்படி தாய்க்கும் சேய்க்கும்மான உணர்வோடும் ,நம் ஒவ்வொருவரின் வாழ்வோடும் கலந்திருப்பது தம் தாய்மொழி தான்!
குழந்தை முதலில் கேட்கும் இசையும கூட தாய் பாடும் தாலாட்டு தான் . "தால்"என்றால் நாக்கு , நாக்கை அசைத்து பாடுகின்ற பாடல் ஆதலால் "தாலாட்டு"என்று ஆனது. இன்று New Born, Infant , Toddler என்றெல்லாம் சொல்கிறோமே , இதை நம் முன்னோர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே , காப்பு, செங்கீரை,தால் ,சப்பாணி ,முத்தம்,வருகை,அம்புலி,சிற்றி ல்,சிறுபறை ,சிறுதேர் என்று குழந்தையின் வளர்ச்சி பருவங்களை வகை படுத்தி உள்ளனர்.
ஏன் மொழிக்கு தாய்மொழி என்று பெயரிட்டான் ? சற்றே சிந்திப்போம். வாழ்வில் மற்ற எல்லா உறவுகளும் மாறிவிடும், இன்றைய நண்பன், நாளையே பகைவனாவான் . ஆனால் தாய் என்ற உயிர் மட்டுமே ,அதே தன்னலமற்ற அன்புடன் நம்மோடு இறுதி வரைக்கும் வருவாள். தாய் மட்டும் தான் ஒரு குழந்தையை செவ்வனே உருவாக்க முடியும். தாய்மொழி அவளால் அறியப்படுகிற மொழி மட்டும் அல்ல , அவளால் மட்டுமே அந்த மொழியை பிழையின்றி தன் பிள்ளைக்கு கொண்டு சேர்க்க முடியும். ஆதலின் மொழியை ஒழுங்காய் பிள்ளைக்கு கொண்டு சேர்க்கும் மிகபெரிய பொறுப்பும் தாயிடம் இருந்து தான் தொடங்குகிறது. ஆனால் , இன்று தாய்மார்களே தங்கள் குழந்தைகள் தங்களை "Mummy " என்று அழைக்க சொல்வது தான் அவலம் . குழந்தைக்கு "anushka, hansika " என்று புரியாத நடிகைகளின் பெயரை வைப்பதை காட்டிலும் நல்ல தமிழ் பெயர்களை சூட்டுங்கள் . உங்கள் பிள்ளையோடு சேர்ந்து மொழியும் பல 100 ஆண்டு வாழும். மிகபெரிய அற நூல்கள் நம் மொழியில் தான் உண்டு. பிள்ளைகளுக்கு நம் பரம்பரியதையும், மொழி பாடல்களையும் ,நீதி கதைகளையும் சொல்லி கொடுங்கள். என்ன தான் ஆங்கில புலமை பெற்றாலும், அது சொன்னதை சொல்லும் கிளிக்கே ஒப்பாகும். கிளியின் பேச்சுத் திறமை பூனை வரும் வரை மட்டுமே ,பூனை யை கண்டதும் "கீச் கீச் " என்று தான் அலறும் . ஆதலால் நாம் , தமிழ் மொழி ஒதுக்கி பிறமொழி புலமை பெறுவது அந்த கிளிக்கே ஒப்பாகும்.
தமிழ் என்பது வெறும் மொழியல்ல , நம் உணர்வோடு கலந்தது . தாய் கூட நாம் சாகும்வரை நம்மோடு வருவதில்லை , ஆனால் தாய் மொழி பிறப்பு முதல் இறப்பு வரை நம்மோடு வரும். மொழியின் வளர்ச்சி வீட்டில் இருந்து தான் தொடங்கும். ஆகவே பிள்ளைக்கு தமிழை சொல்லிகொடுங்கள் ,அவன் , நாளை பெற்றவர்களையும் , தாய்மொழியையும் அனாதை இல்லங்களுக்கு அனுப்பமால் காப்பாற்றுவான் !
"தேன் ஒக்கும் செந்தமிழே நீ தான் கனி ,நான் உந்தன் கிளி. என்ன வேண்டும் இனி " ?. தினம்தோறும் தமிழ்த்தேனை சுவைப்போம். தமிழ் நம் அடையாளம் ,தமிழ் என் தாய் . தமிழ் என் உயிர்க்கு நேர் !