Tuesday, November 11, 2014

மனதில் உறுதி வேண்டும்

மணி என்ன தான் இருக்கும் என்று பக்கத்தில் இருக்கும் டீக் கடையின் சுவர்க் கடிகாரத்தில் பார்த்தாள் கனகா .
11.30 மணி ஆகியிருந்தது . கிட்டத் தட்ட 2 மணி நேரமாய் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து கால் கடுத்துப்போய் இருந்தது. டீக் கடையில் நல்ல கூட்டம்.
நிறைய ஆண்கள், அரட்டை அடித்த படியும், பேப்பர் படித்த படியும் நின்று இருந்தார்கள். சிகரெட் புகை வேறு மூச்சு முட்டுவதைப் போல இருந்தது.
என்னடா , இதோ வரேன்னு போன மனுஷனை இன்னும் காணோம் , நெஞ்சு பக் , பக்கென்றது.
கொடுத்து அனுப்பும் போதே ரொம்ப பயத்தோடு தான் அனுப்பினாள் கனகா . இந்தக் குடிகார மனுஷனை நம்பி இருக்கக் கூடாது தான்.
படு பாவி நேத்து ராத்திரி தூங்கிட்டு இருந்த பிள்ள மேல சத்தியம் செஞ்சானே . “இனி ஒரு வாட்டி கூட குடிக்க மாட்டேன் டீ . இது நான் பெத்த என் புள்ள மேல சத்தியம் ” னு சொன்னான் . கேட்டதும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. ஆனா குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாப் போச்சுனு சொல்றது சரியாதான் போச்சு.
சொல்லவும் முடியாமல் , மெல்லவும் முடியாமல் துடித்துக் கொண்டு நின்றாள் . கண்களில் நீர் வழியத் தொடங்கியது.
பிள்ளைக்கு 6 வயசு முடிந்து விட்டுஇருந்தது. இன்னும் ஸ்கூல்ல சேர்க்க வில்லை . தினந்தோறும் குடித்து விட்டு வரும் கணவனைச் சமாளிப்பதும், அன்றாட சாப்பாட்டிற்கு வழி செய்வதுமே பெரும் சவாலாகிப் போய் இருந்தது. இந்த வருஷம் கண்டிப்பாச் சேர்க்கணும். இல்லாட்டிப் பிள்ளையின் வாழ்க்கை பாழாய்ப் போய்விடும் . அவளுக்குத் தன் மகனைப் பக்கத்தில் இருக்கிற தனியார் ஸ்கூல்ல சேர்க்க ஆசை. பிள்ளைங்க எல்லாரும் டவுசரும் ,ஷூவும் போட்டுகிட்டுப் போறதப் பார்த்த உடனே முடிவு பண்ணிட்டா ,எப்படியாவது இந்த ஸ்கூல்ல என் புள்ளையச் சேர்க்கணும். ஸ்கூல்ல படிக்கற பசங்க ,தொரையாட்டம் என்னமா இங்கிலீஷ் பேசுதுங்க .. நமக்கு தான் வக்கு இல்லாமப் போச்சு .நம்ம புள்ளையவாது நல்லாப் படிக்க வைக்கணும். முடிவு செய்துவிட்டிருந்தாள் கனகா . போய் விசாரித்ததில் காசு நிறையக் கட்டச் சொன்னார்கள் . கைக்கும் ,வாய்க்குமே தான் சம்பாதிக்கும் காசு பத்தாத போது ,ஸ்கூல் பீஸிற்கு எங்க போவது.தலை கிறுகிறுத்துப் போனது.ஆனாலும் எப்படியோ சேர்த்து விட வேண்டும் என்பதில் மட்டும் மனசு துடியாய்த் துடித்தது. தான் வாடகைக்கு குடி இருக்கும் வீட்டுக்காரரிடம் கேட்டுப் பார்க்கலாம். நல்ல மனுஷன் , ஸ்கூல் பீஸ்னா கண்டிப்பாக் குடுப்பார். மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் . கொஞ்சக் காச எப்படியோ புரட்டிடலாம் . ஆனா அதுவும் பத்தாது . நகை நட்டும் எதுவும் இல்லை விற்பதற்கு என்று பெருமூச்சு விட்டாள் . சட்டென்று மின்னல் அடித்தாற்போல , கழுத்தில் இருக்கும் தாலி நினைவிற்கு வந்தது. நம்ம கல்யாண வாழ்க்கைல தாலி ஒண்ணுதான் கேடு. பேசாம ,மீதிக் காசிற்கு , தாலியை அடகு வைக்க வேண்டியது தான். தனக்குள்ளே கணக்குப் போட்டாள் .
புதன் கிழமை பார்த்து, பிள்ளையை ஸ்கூல் சேர்ப்பதற்காகக் கிளப்பிக் கொண்டிருந்தாள் . என் ராசா , நல்லா படிச்சி பெரிய ஆளா வரணும் என்று புத்தி சொல்லிய படியே தலை சீவினாள் .கிளம்பும் நேரத்தில், நானும் வரேன் டீ என்று சொன்னான். இவனை நம்புவதா , வேண்டாமா என்று ஒரே குழப்பம்.
அவள் கண்களின் குழப்பத்தைத் தெரிந்து கொண்டு , ” நான் சத்தியம் பண்ணியும் நம்ப மாட்ர பத்தியா ? , என் புள்ளைய ஸ்கூல் சேர்க்க எனக்கு ஆசை இருக்காதா?” என்று குழைந்தான். சரி ,நல்ல புத்தி வந்து விட்டது என்று நினைத்து, கருமாரியம்மன் படத்தின் முன்பு விழுந்து கும்பிட்டாள் . பிள்ளைக்குத் திருநீர் பூசி , மூவரும் கிளம்பினார்கள்.
பஸ் ஸ்டாண்ட் வந்தவுடன் , எனக்கு தெரிந்த சேட்டு , கொஞ்சம் காசு கூடத் தருவார். நீ பிள்ளையோட இங்கேயே நில்லு ,நான் போய் நகைய வச்சுப் பணத்த வாங்கியாந்துர்ரேன் . சொல்லிவிட்டு , தாலியை வாங்கிக் கொண்டு ரோட்டைக் கிராஸ் செய்தான் .
நேரம் ஆக ஆக , நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது. இனி அவன் வருவான் என்ற நம்பிக்கை முழுவதும் போய் விட்டுஇருந்தது. புள்ளைய இனி எங்க சேர்ப்பேன் . கண்களில் தாரை தாரையாய் நீர் வழிந்தது. வாழ்க்கை இன்னும் அடர்ந்த இருட்டுப் பாதையில் போவதைப் போலத் தோன்றியது .
அம்மா, ரொம்பப் பசிக்குது என்று சேலையைப் பிடித்து இழுத்தான் பாபு. இனி அழுது பிரயோஜனம் இல்லை என்று அறிவு சொல்லியது. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்டாள் .சட்டென எழுந்து டீக்கடையில் ஒரு டீ வாங்கி குடித்தாள் . பிள்ளைக்கும் ரெண்டு பிஸ்கட் வாங்கிக் கொடுத்தாள் . அண்ணாந்து பார்த்தாள் ,வானம் கறுத்துக் கொண்டு மிதந்து வந்தது. டீ கிளாஸை வைத்து விட்டு ,பாபுவை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, விறு விறுவென ரோட்டில் இறங்கி நடந்தாள் . “
“மஞ்சள் என்றென்றும் நிலையானது , மழை வந்தாலுமே கலையாதது “என்று எஸ்.ஜானகியின் குரல் டீக்கடையின் ஸ்பீக்கர் வழியே காற்றில் மிதந்து வந்தது.
வானமும் கசியத் தொடங்கியது. மழை,அவள் நெற்றியில் இருந்த மஞ்சளை மெதுவாய்க் கரைத்த படி ,நீர்த் திவலைகளாய் முகத்தில் வழிந்து கொண்டிருந்தது.
அவள் அரசு பள்ளிக் கூடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் ..

Wednesday, September 10, 2014

கனவு மெய்ப்பட வேண்டும் !

விமானம் புறப்பட  இன்னும் 5 மணி நேரமே இருந்தது .வீட்டில் ஒரே பரப்பரப்பு .
அம்மா...பொடிஎல்லாம் ரெடியா ? கேட்டபடியே கிளம்பிகொண்டிருந்தான் கணேஷ்.  எல்லாம் ரெடிப்பா  என்று குரல் கொடுத்தாள் அம்மா, சமையல் அறையில் பரப்பரப்பாய் ஏதோ செய்தபடி  . 

சார் !, பையன் ஊருக்கு போறானே ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்னு வந்தேன் சொல்லி கொண்டே உள்ளே நுழைந்தார் பக்கத்துக்கு வீடு சுப்பு மாமா .வாங்க சார் என்று அழைத்து அமர சொன்னார் அப்பா.  எப்படியோ சார் கிரிக்கெட் அது இதுனு சும்மா சுத்திட்டு இருந்த உங்க பையனாய் நல்ல படியா இன்ஜினியரிங் படிக்க வச்சி , இப்போ வெளிநாடும் போறான் . ரொம்ப பெருமையா இருக்கு, நீங்க பிள்ளைக்கு நல்லா வழி காம்பிச்சி இருக்கீங்க என்றார் மாமா .  கண்களில் பெருமிதம் பொங்க சிரித்தார் அப்பா,லேசாய் தன் மீசையை தடவியபடி .  என் பையனுக்கு இப்போ தான் புத்தி வர போகுதோ . வாழ்க்கையில் பட்டாதான் அவனுக்கு புரியும் போல என்று தன் மகன் மணியை நினைத்து புலம்பினார் மாமா.

கணேஷ், டைம் ஆச்சுப்பா . வண்டி வந்தாச்சு என்று குரல் கொடுத்தார் அப்பா . கணேஷ் ரெடி ஆகி தன் அறையில் இருந்து வந்தான் . மாடியிலிருந்து கீழிறங்கி வந்து சமையல் அறையில் நுழைந்தான் ..  கண்கள்  சிறிது கலங்கியபடி,  சாமி படங்களின் முன் நின்று இருந்தாள் அம்மா .  நான் கிளம்புறேன்ம்மா.. உடம்ப நல்லா பார்த்துக்கோ ,  என்று சொல்லிய படியே அம்மாவின் தோளில் கை வைத்து அவளை அறுதல் படுத்த முயன்றான் . என்னமோப்பா, நான் கும்பிடற முருகன் தான் உனக்கு நல்ல வழி காண்பிச்சி ,இந்த வேலைய வாங்கி கொடுத்து இருக்கான் . நல்ல படியா போயிட்டு வா,  எங்களை பத்தி கவலை படாதே நீ, அங்க போய்  நல்லா  வேலை பார்த்து பேர் எடுக்கணும் .  டைம் கிடைக்கும் பொது நல்லா  ரெஸ்ட் எடுத்துக்கோ  , கிரிக்கெட் அது இதுனு வெயில்ல சுத்தாதே .  செரிம்மா அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் என்று சொல்லிய படியே அவசரமாய் பெட்டிகளை எடுத்தான் .

 எல்லா பெட்டிகளையும் வண்டியில் ஏற்றியாகி விட்டது . கண்கள் கலங்கிய படி வாசலில் நின்றாள் அம்மா. வண்டியில் வந்து ஏறுப்பா டைம் ஆகுது என்று சொன்னார் அப்பா.  அம்மாவிடம் பிரியா விடைசொல்லி வண்டியில் ஏற எத்தனித்தான் கணேஷ் .  திடீர் என்று ஒரு பந்து வந்து மண்டையில் பட்டது .
பந்தை எடுக்க ஓடி வந்தான் தெருவில் விளையாடி கொண்டிருந்த  ஒரு  சின்ன பையன் .  அண்ணா, நீங்களும் ஒரு ஓவர் விளையாட வரீங்களா?  என்றான்  அவன். நீங்களே வேணாலும் பேட்டிங் பண்ணுங்க என்று கெஞ்சலாய் கேட்டான் .   டேய் , அண்ணா ஊருக்கு போறான் டைம் ஆச்சு நீ விளையாட கூப்பிடறியா என்று அதட்டினார் அப்பா .சரிஅண்ணா , வரும் பொது என்னக்கு ஒரு நல்ல  பேட் வாங்கிட்டுவா என்று சொல்லியபடி ஓடிப் போனான் .
 
        ஏக்கத்தோடு அவனை பார்த்தபடி வண்டியில் ஏறினான் கணேஷ் . கண்களின் ஓரமாய் சில  நீர் துளிகள் எட்டிப்பார்த்தது .வெளியூர் போகும் பொது அழக்கூடாது ,எங்கள விட்டு பிரிஞ்சி போறேன்னு வறுத்த படாதே என்று கார் கண்ணாடியின் வழியே தலையை உள்ளே நுழைத்து சொன்னாள் அம்மா. 
நீ வாழ்க்கையில் பெரிய ஆளா வருவப்பா  " ஆல் தி பெஸ்ட் " என்று கை குலுக்கினார் அப்பா. 
தன் வாழ்க்கை என்பது என்ன என்று யோசித்தபடியே காரின்சைட்   கண்ணாடியை பார்த்தான்.
டேய் "புடிடா ,விடாதே புடிடா " என்று சிறுவன் கத்திக்கொண்டே ஆனந்தமாய்   விளையாடுவது தெரிந்தது .வண்டி நகர நகர சிறுவனும், தான் நேசித்த கிரிக்கெட்டும் தூர  விலகிக்கொண்டே போனது. ..
அவனுக்காவது  கனவு மெய்ப்படட்டும்  என்று நினைத்த படி தன் கண்களை துடைத்து கொண்டான் கணேஷ் . 
அப்போது   திடீரென்று ஏனோ மேகம் மெல்லியதாய் கசிய தொடங்கியது. 

Sunday, August 17, 2014

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது


"தீண்டாய் மெய் தீண்டாய் " ரஹுமான் இசையில் எத்தனையோ முறை இப்பாடலை கேட்டு இருப்போம். 
அந்த பாடலின் தொடக்கத்தில் வரும் மிக அருமையான வரிகள் இவை. இதை நாம் காது கொடுத்து கேட்டு இருக்கிறோமா தெரியவில்லை.

" கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே "

இப்பாடல் குறுந்தொகையில் தலைவியின் கூற்றாக வருகிறது.

பசுவின் காம்பில் பால் சுரக்கிறது . ஆனால் உண்டு பருக வேண்டிய அதன் கன்று இல்லை , பாலை பாத்திரத்தில் பிடித்து கொள்வாரும் இல்லை. எனவே பால், அதன் கன்றும் உண்ணாமல் , பால் கறக்கும் பாத்திரத்திலும் விழாமல் வீணே கீழே வடிகிறது , இதை போல என் அழகை என் தலைவனும் அனுபவிக்காமல் , எனக்கும் இல்லாமல் பசலை என்னும் நோய் என் அழகை தின்று கொண்டு இருக்கிறது.
தலைவனது பிரிவினால் தலைவியின் உடல் வெளிரிபோகும் நிலையே பசலை நோய் என்று குறிக்கபடுகிறது

ஒரு பெண்ணின் மெல்லிய உணர்வுகளை ஆழமாய் இந்த பாடலில் பதிவு செய்திருக்கிறார் . திரைப்பாடலோடு கொஞ்சம் சங்க தமிழையும் செவி மடுப்போம்!!


https://www.youtube.com/watch?v=ldxMZjLtfkY

Thursday, June 5, 2014

வலி மிகும் இடங்கள் , வலி மிகா இடங்கள் தமிழுக்கு தெரிகின்றதே !!



" வலி  மிகும் இடங்கள் , வலி மிகா இடங்கள் 
தமிழுக்கு தெரிகின்றதே ,
வலி  மிகும் இடங்கள் , வலி மிக இடங்கள் 
தங்களுக்கு தெரிகின்றதா ?  " 

இராவணன் படத்தில் , ஸ்ரேயா வின் குரலில் , வைரமுத்துவின் அற்புத  வரிகள்.. 
இந்த வரிகளுக்கு என்ன தான் உண்மையான அர்த்தம் ? 
வலி  மிகும் இடங்கள் , வலி மிக இடங்கள் தமிழுக்கு எப்படி தெரியும் ?

இதோ அதன்  விளக்கம் ..

வலி மிகும் இடங்கள் 
***************************************************************************************************
   சொற்தொடர்களில் வருமொழி 'க்,ச்,த்,ப்'  ஆகிய வல்லேழுதுக்களில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வல்லெழுத்துமிகும் .

  • அ, இ ,எ என்னும் எழுத்துக்களின் பின் வலி மிகும்   +கட்சி = அக்கட்சி 
  • அந்த ,இந்த , எந்த எனும் சுட்டு வினாக்களின் பின் வலி மிகும்   அந்த +பையன் = அந்தப்பையன்  
  • அங்கு , இங்கு என்னும் சொற்களின் பின் வலி மிகும்  அங்கு +சென்றான் = அங்குச்சென்றான்  
  •  அப்படி ,இப்படி என்னும் சொற்களின் பின் வலி மிகும்   இப்படி + செய்இப்படிச்செய்  
  • வன்தொடர் குற்றியலுகர சொற்களின் பின் வலி மிகும்     பட்டு+புடவை = பட்டுப்புடவை 
  • தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகாரத்தின் பின் வலி மிகும்   கனா + கண்டேன் = கனாக்கண்டேன்  
  •  முற்றியல்  'உ'கர சொற்களுக்கு பின் வலி மிகும்     முழு+படம் =  முழுப்படம் 
  • அரை , பாதி என்ற எண்ணும் சொற்களின் பின் வலி மிகும்   அரை +கால் =  அரைக்கால் 
  • ஈறு கேட்ட எதிர்மறை பெயர்எச்சத்தில் வலி மிகும்      ஓடா + குதிரை =   ஓடாக்குதிரை 
  • அகர , இகர ஈற்று வினைஎச்சங்களின் பின் வலி மிகும்  செய்ய +சொல்செய்யச்சொல்  
  • ஆய்,போய்,என என்னும் வினைஎச்சங்களின் பின் வலி மிகும்   போய்+பார்த்தான் = போய்ப்பார்த்தான் 
  •  இரண்டாம் வேற்றுமை உருபு(ஐ) க்கு பின் 'க் ,ச் ,த் ,ப்' வந்தால் வலி மிகும்   கந்தனை + பழி = கந்தனைப்பழி 
  •  நான்காம் வேற்றுமை உருபு(கு) க்கு பின் 'க் ,ச் ,த் ,ப்' வந்தால் வலி மிகும்    அவனுக்கு + சொல் = அவனுக்குச்சொல் 
  • ஆறாம்  வேற்றுமை தொகையில் நிலைமொழி அகிறனை இருப்பின் வலி மிகும்  நாய் + குட்டி = நாய்க்குட்டி  
  • உவமை தொகையில் வலி மிகும் மலர்தேன்மலர்த்தேன்  
  • பண்புத்தொகையில் வலி மிகும்  வெள்ளை + தாமரை =  வெள்ளைத்தாமரை  
  • ஓர்எழுத்து  ஒரு மொழிக்கு பின் வலி மிகும்  பூ + பந்தல் = பூப்பந்தல் 

 வலி  மிகா இடங்கள் 

***************************************************************************************************
 சொற்தொடர்களில் வருமொழி 'க்,ச்,த்,ப்'  ஆகிய வல்லேழுதுக்களில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வல்லெழுத்து மிகாது .

  • அது , இது ,அவை ,இவை  இவற்றின் பின் வலி மிகாது      அது+பண்பு =அதுபண்பு 
  • ஆ,ஓ,ஏ,யா என்ற வினா எழுத்துக்களின் பின் வலி மிகாது  எங்கே +போனாய் = எங்கேபோனாய் 
  • அன்று , இன்று , என்று ஆகிய சொற்களின் பின் அன்றுசொன்னான்  =அன்றுசொன்னான் 
  • படி ,மாறு என்று வரும் வினை எச்சங்களின் பின்   வலி மிகாது     படிக்கும்படி + சொன்னனர் = படிக்கும்படிசொன்னனர் 
  • '- ன்று , -ந்து ,-ண்டு, ய்து '  என்று முடியும் வினை எச்சங்களின் பின் வலி மிகாது     என்று + கத்தினார் =  என்றுகத்தினார் 
  • உயர்திணை பெயர் , பொது பெர்யர்களின் பின் வலி மிகாது  தம்பி +சிறியவன் = தம்பிசிறியவன் 
  • அங்கே , இங்கே, எங்கே என்று 'ஏ'காரத்தில் முடியும் சொற்களில் பின் வலி மிகாது  அங்கே + பார் = அங்கேபார் 
  • எது ,ஏது, யாது ,யாவை என்னும் வினாச் சொற்களின் பின்  வலி மிகாது  எதுகேட்டாய்எதுகேட்டாய் 
  • அவ்வளவு , இவ்வளவு , எவ்வளவு என்னும் அளவு சொற்களின் பின்  வலி மிகாது  அவ்வளவு+பெரிய  = அவ்வளவுபெரிய 
  • பெயர்ச் எச்சத்தின் பின் வலி மிகாது    படித்த + பாடம் = படித்தபாடம் 
  • எழுவாய் தொடரில் வலி மிகாது ஆடுகத்தியதுஆடுகத்தியது 
  • விளிதொடரில் வலி மிகாது  தம்பி+போ !  = தம்பிபோ
  • மூன்றாம் வேற்றுமை உருபுகள் " ஓடு ,ஒடு'  சொற்களின் பின் வலி மிகாது  
தம்பியோடு + சேர்ந்தான் = தம்பியோடுசேர்ந்தான் 
  •  ஐந்தாம் வேற்றுமை உருபுகள் " இருந்து  ,நின்று '  சொற்களின் பின் வலி மிகாது 
 கூரையிலிருந்து + குதித்தான் = கூரையிலிருந்து குதித்தான் 
  • ஆறாம் வேற்றுமை உருபுகள் " அது   ,உடைய  '  சொற்களின் பின் வலி மிகாது   அவனது + பை = அவனது பை 
  • இரண்டாம் வேற்றுமை தொகையில் வலி மிகா    கனி + தின்றான் =  கனிதின்றான் 
  • ஆறாம் வேற்றுமை தொகையில்  நிலைமொழி உயர்திணையாய் இருப்பின் வலி மிகாது  குழந்தை + கை = குழந்தை கை 
  • உம்மை தொகையில்  வலி மிகாது      காய் கனி ;  வெற்றி தோல்வி  
  • வினை தொகையில்  வலி மிகாது   குடிநீர்  = குடி நீர் ;  ஆடு + கொடிஆடு கொடி 

    பாடலை கேட்டு ரசிப்பதோடு , கொஞ்சம் தமிழின் மாண்பினையும் உணர்வோம் ,   காதலின் அனுபவத்தை இலக்கணத்தோடு சொன்ன வைரமுத்துக்கு ஒரு பெரிய சபாஷ் !!  

Thursday, May 1, 2014

அமுதூட்டிய அம்மா

மூணு வயசுவர நீதந்த தாய்ப்பாலு 
மூளையின் மடிப்பிலே மறைஞ்சே போச்சுதடி ,
முப்பது வருஷம் நீபோட்ட சோறு 
மூச்சே நின்னாலும் நினைப்பவிட்டு நீங்காதடி .

நீர் ஆவியிலையா நீ இட்லி சுட்ட ,
நீஎன் ஆவியவும் அதோடு சேர்த்துத்தான் விட்ட 
வட்ட நிலவா தட்டுல வந்து விழுகையல
புத்திக்கூட ஒரு நிமிஷம் கெட்டுத்தான் போச்சுதடி

மல்லிகைப்பூ இட்லின்னு எவன்சொன்னான் ?
நியாமா சொல்லனும்னா , உன் இட்லியை
சாப்பிட்டு போன கடவுள், உடனே
மல்லிப்பூவ செஞ்சிருக்கணும் .

ரசத்திற்கு நீ கரைக்கும் "புளி" கூட
இவளுக்கு , "நாம" புள்ளையா பிறக்கலன்னு
சோகத்திலேயே கரைஞ்சி போச்சு ..
கொதிக்கும் ரச வாசனை,
மூளை வரைக்கும் "கமகம"க்கும்
மூக்கில் எச்சில் மட்டும் சுரந்தா
அதுவும் ரெண்டு சொட்டு வடிச்சிருக்கும் .

நானும், இப்ப கொஞ்ச நாளா
சோறுபொங்கி பழகுறேன்
ஒரு நாள் சோறு -- "கொழகொழ" சேறு
மறுநாள், கஞ்சி மொத்தம் குடிச்சிட்டு
அரிசி , நாட்டின் அரசியாட்டம்
என்ன பார்த்து மொறைக்குது . .

நான் வச்ச குழம்பு ,
எண்ணெயிலே தண்ணியாட்டம்
எல்லாம் தனித்தனியா தவிக்குது ,
நீ தொட்டா மட்டும்
திருமண ஜோடியாட்டம் கட்டிப்புடிச்சி சிரிக்குது

பதப்படுத்தி ,சூடுப்படுத்தி - திரும்பவும்
சூடுப்படுத்தி ,பதப்படுத்தி நாங்க
சாப்பிடற சாப்பாட்டுக்கு - நாக்குன்னு
ஒன்னு இல்லாட்டி நல்லாத்தான் இருந்திருக்கும்

தேவர்கள் எல்லாரும், அமிர்தம் சாப்பிட்டு
சாகாம இருந்து என்ன செய்ய?
தேவதை உன் சோறு சாப்பிட்டபிறகு
செத்துக்கூட போகலான்னு பேசிக்கிறாங்க .

சட்டி கொழம்பு முழுக்க வழிச்சி ,
சப்புக்கொட்டி தின்னுப்புட்டு - பிறகு
சுயநினைவு வந்து
"உனக்கு இருக்கானு ?? " கேக்கையிலே
"உள்ள நிறைய இருக்கு"னு
சட்டுனு நீ சொன்ன ஒரு பொய்க்கு
சொத்தையே எழுதித் தரலாம்

ஆயகலைகள் அறுபத்தி நான்கிலும் ,
குருவை மிஞ்சிய சீடன் உண்டு
சமையலில் தாயை விஞ்சிய
மகள் தரணியில் எங்கும் உண்டோ ??

Friday, April 4, 2014

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

 அந்தியில் ஆற்றங்கரைதனில் , 
சந்தத்தால் கவிபாட , 
சிந்தித்து காத்திருந்தேன் ... 

பளிங்கு சிலையொன்று பக்கத்தில்வந்து , 
என்னை பாரென்றது சித்தம் குழம்பி நான் , தாங்கள் யாரென்றேன்
பிள்ளை அழுமுன் தாய்,தமிழ்ப்பால் கொணர்ந்தேன் என்றாள்
அவள் என அன்னைத்தமிழ் என்று கண்டுகொண்டேன் !!

உன்னிடம் சில வினாக்கள் உண்டென்றேன்

உலகம் அறியவிரும்பும் குழந்தை எத்தனை கேள்விகள் கேட்கும் - 
நீயும் அப்படி கேள் என்றாள் ! 

தாயே , தாங்கள் தோன்றிய திங்கள் எதுவோ ?

 காற்று தோன்றிய காலம் அறிவாய் - நீ
கானகம் தோன்றிய காலமும் அறிவாய் .
நேற்று பிறந்த பிள்ளாய் நீ - 

என் தோற்றம் பற்றி அறியாய் ! 
என்னில் , ஒரு துண்டுதான் சூரியன் . 
சூரியன் தோன்றிய நாளை நீயே கணக்கிட்டு சொல் !! 

தமிழகத்தில் தமிழின் நிலை என்னவோ? 
நான் தோன்றியதங்கே தான் , 

நான் ஒளிகொண்டதும் அங்கேதான் - 
ஆனால் விளக்கின் அடியில் இன்னும் கொஞ்சம் இருள் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது !! 

உன் புதல்வர்கள் எல்லாம் அயலகம் புகுகிறார்களே உன் புகழும் புதையுமோ ?

 பிள்ளை வீட்டைவிட்டு வெளியேறினாலும் தாய்ப்பால் தந்தவள் நானல்லவா? 
புலம்பெயர்ந்த புதல்வர்களே உலகெங்கும் - என் புகழ் பற்றி பேசுகிறார்கள் .. 
ஈழத்தின் தமிழன்தான் இன்னும் ஈரமோடு என்கண்களை காக்கின்றான் 
முகவரி மறந்தாலும் - அவர்கள் முகத்தை மறைக்கவில்லை !! 

உன்னை தாங்களே வளர்ப்பதாய் சிலர் சொல்கிறார்களே ? 
நிலவு நினைக்கிறது தான் அழகியென்று - 

அதுவெறும் பரிதியின் நிழலென்று தெளியாத அறியாமையினால் !! 

இரெண்டே மதிப்பெண்கள் தானே என மாணாக்கர் 

திருக்குறளை விடுக்கும்போது உன் நெஞ்சு என்ன நினைக்கும்? 
அவர்கள் விடுப்பது குறளைஅல்ல - மூடிகொள்வது தங்கள் இருவிழிகளென சொல்லத்துடிக்கும் !! 

தமிழ்ஒதுக்கி பிறமொழி கற்கும் மேதைகள்பற்றி ? 

கண்களை விற்று ஓவியம் வாங்கும் பேதைகள்.
அன்னை இருக்க சித்தியை அழைக்கும் பேடிகள் !! 

இனி எங்கள் கடமைஎன்ன சொல்வாயா ? 
உன் பிள்ளைக்கு தமிழை ,மொழியென்று சொல்லாதே , 
அவன் வாழ்வின் நெறியென்று உயிரில் உற்றிவை !! 

உன் மாட்சி மங்கிற்றொ ? 
சிகரம்தான் சிதைந்தாலும் - என்னை சிலுவையிலே அறைந்தாலும் 
அரிசியலில் என்சேலை சிறிது அழுக்காகி போனாலும் 
ஆதவனை கைக்கொண்டு மறைப்பார் யார் ??

வருங்காலம் உன் புகழ் பேசுமா? 
வருந்தாதே வஞ்சியே , என் புகழ் பேசாவிடில் உங்களுக்கு வருங்காலம் என்றொன்று இல்லை.

பின் அன்னைஎன்னை அரவணைத்து நகர்ந்தாள் அவள் அருமை நினைந்து
'' தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு நடந்தேன் 
என் காதில் "அமிழ்து ,அமிழ்து "என்று ஒலிக்ககண்டேன் !! -

Thursday, April 3, 2014

கலியநாயனார் புராணம்




                                         தமிழகம் சான்றோரை தன் நாட்டுச் செல்வமாகக் கொண்டுள்ளது . "சேரநாடு வேழமுடைத்து , பாண்டிநாடு முத்துடைத்து , சோழநாடு சோறுடைத்து , தொண்டைநாடு சான்றோருடைத்து . சான்றோர்கள் பலர் தோன்றி மனிதன் , "எப்படியும் வாழலாம் என்றில்லாமால் "இப்படித்தான் வாழ வேண்டும் " என்று மனிதன் வாழ்க்கைக்கு
தேவையான பல நெறிமுறைகளை, சமய இலக்கியங்களின் வாயிலாக  வகுத்துக் கொடுத்திருக்கின்றனர் . 

                       சமயம் என்ற சொல் "சமைதல் " அதாவது பக்குவபடுதல் என்னும் சொல்லில்லிருந்து தோன்றியது .  மனிதனை பண்படுத்த தோன்றியதே சமயங்கள். சமயங்களில் மிகதொன்மையனது சைவச் சமயம் .சைவச்சான்றோர்கள்   இறைவனை , அம்மை அப்பனாக , உற்றார் உறவினராக, மாமன் மாமியாக ,காதலனாக என பல்வேறு நிலைகளில் மனத்தினுள் இறைவனை நிறுத்தி இறுதியில் இறைவனது திருவடியை பற்றினர்.இவ்வாறு இறைப்பணி செய்து சிவதொண்டாற்றிய 63 சைவர்களும் பல குலத்தினை சேர்ந்தவர்களாக இருப்பினும் சிவநெறியிலே ஒன்றுபட்டவர்கள் . இவர்களின் பெருமைகளை உலகுக்கு உணர்த்தி திருவிளக்கினை குன்றின் மீது ஏற்றி வைத்த பெருமை சேக்கிழாரை சாரும்.

                    சேக்கிழார் தமது திருத்தொண்டர் புராணத்தில் , இறைவனது பெருமையைக் காட்டிலும் ,அடியார்களின் பெருமைகளையே மிகுதியாக பறைசாற்றுகின்றார் .  தொண்டர்களின் பெருமைகளை பேசக்கிடைத்த ஒரு கருவியாக , பிறப்பினை நினைத்து ,

                                 " ஈசன் அடியார் பெருமையினை 
                                   எல்லா உயிரும் தொழ எடுத்துத் 
                                  தேசம் உய்யத் திருத்தொண்டர் 
                                  தொகைமுன் பனித்த திருவாளன் 
                                  வாசமலர் மென்கழல் வணங்க 
                                  வந்த பிறப்பை  வணங்குவாம் "                       என்று பாடுகின்றார்.

                     தொண்டைநாட்டு சான்றோர்கள்  " கலியர் ,கழற்சிங்கர் , திருகுறிப்புத்தொண்டர் ,கண்ணப்பர்,பூசலார் ,வாயிலார் என பலர் இருப்பினும் "கொள்கையினையே உயிர் மூச்சாக கொண்ட "கலியநாயனார் என்னை வெகுவாக கவர்ந்தார் .

                    கலியனார் என்ற சொல்லுக்கு வலிமையுடையவர் என்று பொருள். தொண்டைநாட்டு திருத்தலங்களில் ஒன்றான திருவொற்றியூரில் செக்குத்தொழில் புரிகின்ற மரபினில் உதித்தவர் . இவர் செல்வதினை மிகுதியாக பெற்றுஇருப்பினும் , அழியா செல்வமாகிய அருட்ச்செல்வதினை போற்றி வளர்த்தார். இவரது  செல்லவச் செழிப்பினை ,

    "மிக்கபொருள் செல்வத்து மீக்கூர விளங்கினார் 
     தக்கபுகழ்க் கலியனார் எனுநாமத்  தலைநின்றார் 
    முக்கண்  இறைவர்க்குரிமைத் திருத்தொண்டின் நெறிமுயல்வார் "     

  என்று பாடுகின்றார் .

                  தம்மிடம் இருந்த அளவற்ற செல்வத்தினைத் கொண்டு திருவொற்றியூர் கோயிலில் இரவும் பகலும் தீபம் ஏற்றுகின்ற திருப்பணியில் ஈடுபட்டார் . இவரின் சிவப்பற்றை உலகறிய செய்ய விரும்பிய ஈசன் , இவரின் செல்வநிலையை தளர்த்தினார் . தனது செல்வங்களை இழந்த போதும்,

                             "தேடிய மாடு நீடு செல்வமும்  
                              தில்லை மன்றுள் ஆடிய பெருமான் 
                             அன்பர்க்கு ஆவன ஆகும்"                     

 என்று   எண்ணெய் விற்று  கொடுத்து ,அதன்மூலம்  கிடைக்கும் கூலியில் , திருவிளக்கு ஏற்றினார் .அந்தப்பணிக்கும்  இடர் ஏற்பட்டதால் , எண்ணெய்  ஆட்டும் இடத்தில் கூலிவேலை 
செய்து , அந்த பணத்தில் விளக்கேற்றுகின்றார் .
      
                   "அப்பணியால் வரும்பேறு அவ் வினைஞர் பலருளராய் 
                    எப்பரிசுங்  கிடையாத வகைமூட்ட இடருழந்தே 
                    ஒப்பில்மனை விற்றெரிக்கும்  உறுபொருளும் மாண்டதற்பின் 
                    செப்பருஞ்சீர் மனையாரை விற்பதற்குத் தேடுவார் " 

 என்ற பாடலை நோக்குமிடத்து , ஏற்ற பணிக்கு இடர் வந்துற்றபோது தனது மனையாளையே  விற்க துணிகிறார் .

                    "கேடும்  ஆக்கமும் கெட்ட திருவினார் 
                      ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் 
                      கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி 
                      வீடும் வேண்டா விறலின் விளங்கினார் '" 

என்பது போன்று  சிவவழிபாட்டிற்கு இடர்வருமாயின்  எதனையும் நான் இழப்பேன் என்ற கொள்கையினை கொண்டு வாழ்ந்தார் .

                         மனைவி விலைபோகவில்லை என்பதனால் , திருகோயிலின்  விளக்கிற்கு தனது உதிரத்தையே  எண்ணெய் ஆக கொடுக்க துணிகிறார் .  தன் கழுத்தினை அரிய முற்ப்பட்டபோது ,இறைவனின் திருக்கரமே இவருடைய கையைப் பிடித்து நிறுத்தியது .
ஆக ஒரு மனிதன் வாழ்வில் உயரிய நிலைபெற வேண்டுமாயின் அவனுக்கு " திண்ணிய நெஞ்சம் வேண்டும் "

                   " தும்பம் உறவரினும் செய்க துணிவாற்றி 
                      இன்பம் பயக்கும் வினை "

 என்ற வள்ளுவரின் வாக்கினை மெய்ப்பிக்கிறது இப்புராணம் .

   மனிதன் தனக்குரிய பொன்னை விற்பான் , மண்ணை விற்பான் ஆனால் உரிமையான மனைவியையும் விற்க துணிவாரோ ?
  
                             செல்வம் உள்ளபோது பூசையை சிறப்பாகச் செய்வது என்பது எளிது . ஆனால் செல்வம் குறைந்து வறிய நிலைக்கு ஆட்பட்டபோதும்  தன்  பணியை விடாது செய்தமை இவர் பக்தியின் சிறப்பை உணர்த்துகிறது .  பெரும்பாலும் , மனிதன் பக்தி செலுத்துவான் , துன்பம் வந்தால் , இத்துணை பக்தி செலுத்தியும் ,இறைவன் நம்மை கைவிட்டானே என நோவான் . ஆனால்  எத்தகைய துயர் வந்துற்ற போதும் , இவையாவும் ஈசனது செயலென்று எண்ணி  இடைவிடாத இறைவழிபாடு செய்தல் வேண்டும் என்ற மற்றுமொரு தூய பக்தி நெறியை காட்டுகிறது கலிய நாயனார் புராணம் .

                          மனிதன் மரண யாத்திரை  போகும்போது பொன்,பொருள்,நிலம், வீடு, மனைவி, மக்கள் யாவும் உடன் வரா .உடன்  வருவன பாவ ,புண்ணியம் மட்டுமே. உணவினால் உடம்பு வளரும். உள்ளம் அறநெறிகளால் தான் வளரும். வெள்ளம் உயர்ந்தால் மலர் உயரும் . உள்ளம் உயர்ந்தால் மனிதன் உயர்வான் . உள்ளம் உயர்வதற்கு இறைவழிபாடு அவசியமாகிறது . பக்தி என்பது வெறும் ஆசாரம் , அனுஷடானம் , பாக்களை மனனம் செய்தல் என்பன மட்டுமே ஆகாது . மனத்தை தூய்மை ஆக்குவதே பக்தி. 

                     " கிருதயுகத்தில் ஞானத்தினால்  முக்தி, 
                       திரேதாயுகத்தில் தானத்தினால் முக்தி,
                       துவாபரயுகத்தில் யாகத்தினால் முக்தி,
                       கலியுகத்தில்  பக்தியினால் முக்தி " 

                     "உய்ய வல்லார்கட்கு  உயிர்சிவ ஞானமே 
                      உய்ய வல்லார்கட்கு உயிர்சிவ தெய்வமே 
                      உய்ய வல்லார்கட்கு ஒடுக்கம் பிரணவம் 
                      உய்ய வல்லார் அறிவு உள்ளறி வாமே " 

 என்ற திருமூலர் வாக்கினை உணர்ந்து , மெய் அறிவு தெளிந்து  ஞானம் பெறுவோம் !! 

Tuesday, March 18, 2014

கவிமேகம் - காளமேகம் !!!

Betty Botter bought some butter;
"But," said she, "this butter's bitter!
If I put it in my batter
It will make my batter bitter.
But a bit of better butter
Will but make my batter better."
Then she bought a bit of butter
Better than the bitter butter,
Made her bitter batter better.
So ´twas better Betty Botter
bought a bit of better butter.

இதை ,உங்களை சொல்லச்சொல்லி திணறடிக்கும் Peter மக்களுக்கு, இதோ தமிழில் அதைவிட சிறப்பாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைந்த காளமேக புலவரின் பாடல்..

பாடல் : 
***********

"காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைகா கா!
படிக்கும் போதே நா குழருகிறதா?? பாடலை கொஞ்சம் பிரித்து சொல்லி பார்ப்போம் ..

காக்கைக்கு ஆகா கூகை கூகைக்கு ஆகா காக்கை
கோக்கு கூ காக்கைக்கு கொக்கு ஒக்க - கைக்கைக்கு
காக்கைக்கு கைக்கு ஐக்கு ஆகா !

சொல்லாட்சி : காக்கை -- காகம் , காத்தல்
                          கூகை -- ஆந்தை
                          கோ -- அரசன்
                          கூ -- உலகம்
                          ஒக்க - போல
                           கைக்கைக்கு -- பகை எதிர்த்து

காக்கைக்கு இரவில் பார்வை கிடையாது அப்போது ஆந்தையுடன் சண்டையிட்டால் காக்கை தோற்கும் . அதே போல் ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது எனவே அது பகலில் காகையிடம் தோற்கும் .. இதுபோல் நாட்டை காக்கும் அரசன் , கொக்கு தன் இரைக்கு ஒற்றைக்காலில் நெடுநேரம் காத்திருப்பது போல் , தான் வலிமை மிக்கவனாய் இருப்பினும் தனக்கு தகுந்த நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும். இல்லையெனில் பகையை எதிர்த்து நாட்டைக் காத்தல் என்பது திறமைமிக்க மன்னனின் கைக்கு எட்டாமல் போய்விடும்...

தமிழ், ஆங்கிலத்திற்கு சளைத்ததில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.. Tongue twisters சொல்லி விளையாடும் நம் வீடு பிள்ளைகளுக்கு காளமேக புலவரின் பாடல்களையும் சொல்லி கொடுப்போம்

Wednesday, February 26, 2014

நான் யார் ?

ஏழு வயதில் என் நண்பர்களுடன்
 உன் மேல் ஏறி நின்று ஆடியபோதெல்லாம்,
கீச் கீச் சென்று நீ சத்தம் இட்டாலும்
அதை சட்டை செயாமல் நான்
ஆடிய ஆட்டம் நீ அறிவாய்!!

பதினான்கு வயதில் என்னை வீட்டிலேயே
பூட்டி வைத்த போது
உன்னை உடைத்து நான் வெளியேற
நினைத்த ஆத்திரம்  நீ அறிவாய் !!

இருபத்தி ஒரு வயதில் காதலுற்ற போது
பலர் வந்து உன்னை தட்டும் போதல்லாம்
அவரோ என நினைத்து
துள்ளி குதித்து உன்னை திறந்த ஆவலையும்
அவரில்லை என்ற போது நான் அடைந்த
ஏமாற்றத்தையும் நீ அறிவாய் !!

என்னவன் வந்த போது,
அவன் முகம் பார்க்க ஆசை இருந்தும்
அத்தனையையும் அடக்கி ,
உன் பின்னால் என் பாதி உடல் மறைத்து
நான் தவித்த தவிப்பை நீ மட்டுமே அறிவாய் !!

ஊர் கூடி வாழ்த்திய பிறகு  ,
தோழிமார் என்னை தள்ளிய பின்
நாங்கள் இருவரும் அடையும் இன்பத்தை
யாருமே அறியாத போதும்
என் காதலையும் , நாணத்தையும்
நீ மட்டுமே அறிவாய் என் ஆருயிர் தோழி !!!

நட்பின் தூரம் !!

தூரத்தில் இருக்கிறது சூரியன்
உலகெங்கும் தன் தூரிகையால் ஒளிகூட்டி
எங்கோ சிரிக்கிறது வெண்ணிலா
தன் குளுமையால்  உயிர்களை தாலாட்டி
புதரில் பூத்திருக்கும் தாழம்பூ
சுற்றமெங்கிலும் தன் மணம்பரப்பி
மலை உச்சியின் ஒற்றைமரம்
சுமந்திருக்கும் நனிசுவை கொண்ட தேன்கூட்டை
எங்கோ இருக்கிறாய் நீ -நம்
நட்பின் சுவையை மென்மேலும் கூட்டியபடி
நட்பிற்கு தூரம்ஒரு பாரம் இல்லையென்று
நினைத்தபடி அண்ணார்ந்து பார்த்தேன்
விமானம் ஒன்று என்னை கடக்கிறது , பயணிகளையும்
என் மனதையும் நீ இருக்கும்
இடம்நோக்கி சுமந்தபடி !!

தாயே நீ வாழி !

நீ திட்டிஇருக்கிறாய் -  நான் அழுதிருக்கிறேன் ;
மறு நொடி, கேட்டது தருவாய் -  உடனே சிரிப்பேன்..
உன் உணவினை குறை சொன்னேன், தூக்கி எறிந்தேன் ;
உடனே வேறு சமைப்பாய், பசி ஆறினேன். 
நான் படிப்பேன், நீ கண்விழிப்பாய் , 
எட்டி உதைத்தேன் , கட்டி புரண்டேன் , 
ஆனாலும் உன் முந்தானை பிடித்தே தூங்கி இருக்கிறேன்.. 
அப்போது மட்டுமே  நிம்மதியாய்  நான் உறங்கி இருக்கிறேன் ..
திரும்பி பார்த்தால் , உன்னோடு மட்டுமே நான் உண்மையாய் வாழ்ந்திருக்கிறேன் ..
என் முதல் , கடைசி காதல் இருண்டுமே நீ மட்டும் தான் என்று இன்று உணர்கிறேன் .. 
அருகில் இருந்தாய் அருமை புரியவில்லை. , பெருமை உணர்ந்தேன் அருகில் நீ இல்லை.. 
எங்கோ இருக்கிறாய் நீ...
என்  உயிர் தாயே என்றும் நீ  வாழி !