Thursday, April 3, 2014

கலியநாயனார் புராணம்




                                         தமிழகம் சான்றோரை தன் நாட்டுச் செல்வமாகக் கொண்டுள்ளது . "சேரநாடு வேழமுடைத்து , பாண்டிநாடு முத்துடைத்து , சோழநாடு சோறுடைத்து , தொண்டைநாடு சான்றோருடைத்து . சான்றோர்கள் பலர் தோன்றி மனிதன் , "எப்படியும் வாழலாம் என்றில்லாமால் "இப்படித்தான் வாழ வேண்டும் " என்று மனிதன் வாழ்க்கைக்கு
தேவையான பல நெறிமுறைகளை, சமய இலக்கியங்களின் வாயிலாக  வகுத்துக் கொடுத்திருக்கின்றனர் . 

                       சமயம் என்ற சொல் "சமைதல் " அதாவது பக்குவபடுதல் என்னும் சொல்லில்லிருந்து தோன்றியது .  மனிதனை பண்படுத்த தோன்றியதே சமயங்கள். சமயங்களில் மிகதொன்மையனது சைவச் சமயம் .சைவச்சான்றோர்கள்   இறைவனை , அம்மை அப்பனாக , உற்றார் உறவினராக, மாமன் மாமியாக ,காதலனாக என பல்வேறு நிலைகளில் மனத்தினுள் இறைவனை நிறுத்தி இறுதியில் இறைவனது திருவடியை பற்றினர்.இவ்வாறு இறைப்பணி செய்து சிவதொண்டாற்றிய 63 சைவர்களும் பல குலத்தினை சேர்ந்தவர்களாக இருப்பினும் சிவநெறியிலே ஒன்றுபட்டவர்கள் . இவர்களின் பெருமைகளை உலகுக்கு உணர்த்தி திருவிளக்கினை குன்றின் மீது ஏற்றி வைத்த பெருமை சேக்கிழாரை சாரும்.

                    சேக்கிழார் தமது திருத்தொண்டர் புராணத்தில் , இறைவனது பெருமையைக் காட்டிலும் ,அடியார்களின் பெருமைகளையே மிகுதியாக பறைசாற்றுகின்றார் .  தொண்டர்களின் பெருமைகளை பேசக்கிடைத்த ஒரு கருவியாக , பிறப்பினை நினைத்து ,

                                 " ஈசன் அடியார் பெருமையினை 
                                   எல்லா உயிரும் தொழ எடுத்துத் 
                                  தேசம் உய்யத் திருத்தொண்டர் 
                                  தொகைமுன் பனித்த திருவாளன் 
                                  வாசமலர் மென்கழல் வணங்க 
                                  வந்த பிறப்பை  வணங்குவாம் "                       என்று பாடுகின்றார்.

                     தொண்டைநாட்டு சான்றோர்கள்  " கலியர் ,கழற்சிங்கர் , திருகுறிப்புத்தொண்டர் ,கண்ணப்பர்,பூசலார் ,வாயிலார் என பலர் இருப்பினும் "கொள்கையினையே உயிர் மூச்சாக கொண்ட "கலியநாயனார் என்னை வெகுவாக கவர்ந்தார் .

                    கலியனார் என்ற சொல்லுக்கு வலிமையுடையவர் என்று பொருள். தொண்டைநாட்டு திருத்தலங்களில் ஒன்றான திருவொற்றியூரில் செக்குத்தொழில் புரிகின்ற மரபினில் உதித்தவர் . இவர் செல்வதினை மிகுதியாக பெற்றுஇருப்பினும் , அழியா செல்வமாகிய அருட்ச்செல்வதினை போற்றி வளர்த்தார். இவரது  செல்லவச் செழிப்பினை ,

    "மிக்கபொருள் செல்வத்து மீக்கூர விளங்கினார் 
     தக்கபுகழ்க் கலியனார் எனுநாமத்  தலைநின்றார் 
    முக்கண்  இறைவர்க்குரிமைத் திருத்தொண்டின் நெறிமுயல்வார் "     

  என்று பாடுகின்றார் .

                  தம்மிடம் இருந்த அளவற்ற செல்வத்தினைத் கொண்டு திருவொற்றியூர் கோயிலில் இரவும் பகலும் தீபம் ஏற்றுகின்ற திருப்பணியில் ஈடுபட்டார் . இவரின் சிவப்பற்றை உலகறிய செய்ய விரும்பிய ஈசன் , இவரின் செல்வநிலையை தளர்த்தினார் . தனது செல்வங்களை இழந்த போதும்,

                             "தேடிய மாடு நீடு செல்வமும்  
                              தில்லை மன்றுள் ஆடிய பெருமான் 
                             அன்பர்க்கு ஆவன ஆகும்"                     

 என்று   எண்ணெய் விற்று  கொடுத்து ,அதன்மூலம்  கிடைக்கும் கூலியில் , திருவிளக்கு ஏற்றினார் .அந்தப்பணிக்கும்  இடர் ஏற்பட்டதால் , எண்ணெய்  ஆட்டும் இடத்தில் கூலிவேலை 
செய்து , அந்த பணத்தில் விளக்கேற்றுகின்றார் .
      
                   "அப்பணியால் வரும்பேறு அவ் வினைஞர் பலருளராய் 
                    எப்பரிசுங்  கிடையாத வகைமூட்ட இடருழந்தே 
                    ஒப்பில்மனை விற்றெரிக்கும்  உறுபொருளும் மாண்டதற்பின் 
                    செப்பருஞ்சீர் மனையாரை விற்பதற்குத் தேடுவார் " 

 என்ற பாடலை நோக்குமிடத்து , ஏற்ற பணிக்கு இடர் வந்துற்றபோது தனது மனையாளையே  விற்க துணிகிறார் .

                    "கேடும்  ஆக்கமும் கெட்ட திருவினார் 
                      ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் 
                      கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி 
                      வீடும் வேண்டா விறலின் விளங்கினார் '" 

என்பது போன்று  சிவவழிபாட்டிற்கு இடர்வருமாயின்  எதனையும் நான் இழப்பேன் என்ற கொள்கையினை கொண்டு வாழ்ந்தார் .

                         மனைவி விலைபோகவில்லை என்பதனால் , திருகோயிலின்  விளக்கிற்கு தனது உதிரத்தையே  எண்ணெய் ஆக கொடுக்க துணிகிறார் .  தன் கழுத்தினை அரிய முற்ப்பட்டபோது ,இறைவனின் திருக்கரமே இவருடைய கையைப் பிடித்து நிறுத்தியது .
ஆக ஒரு மனிதன் வாழ்வில் உயரிய நிலைபெற வேண்டுமாயின் அவனுக்கு " திண்ணிய நெஞ்சம் வேண்டும் "

                   " தும்பம் உறவரினும் செய்க துணிவாற்றி 
                      இன்பம் பயக்கும் வினை "

 என்ற வள்ளுவரின் வாக்கினை மெய்ப்பிக்கிறது இப்புராணம் .

   மனிதன் தனக்குரிய பொன்னை விற்பான் , மண்ணை விற்பான் ஆனால் உரிமையான மனைவியையும் விற்க துணிவாரோ ?
  
                             செல்வம் உள்ளபோது பூசையை சிறப்பாகச் செய்வது என்பது எளிது . ஆனால் செல்வம் குறைந்து வறிய நிலைக்கு ஆட்பட்டபோதும்  தன்  பணியை விடாது செய்தமை இவர் பக்தியின் சிறப்பை உணர்த்துகிறது .  பெரும்பாலும் , மனிதன் பக்தி செலுத்துவான் , துன்பம் வந்தால் , இத்துணை பக்தி செலுத்தியும் ,இறைவன் நம்மை கைவிட்டானே என நோவான் . ஆனால்  எத்தகைய துயர் வந்துற்ற போதும் , இவையாவும் ஈசனது செயலென்று எண்ணி  இடைவிடாத இறைவழிபாடு செய்தல் வேண்டும் என்ற மற்றுமொரு தூய பக்தி நெறியை காட்டுகிறது கலிய நாயனார் புராணம் .

                          மனிதன் மரண யாத்திரை  போகும்போது பொன்,பொருள்,நிலம், வீடு, மனைவி, மக்கள் யாவும் உடன் வரா .உடன்  வருவன பாவ ,புண்ணியம் மட்டுமே. உணவினால் உடம்பு வளரும். உள்ளம் அறநெறிகளால் தான் வளரும். வெள்ளம் உயர்ந்தால் மலர் உயரும் . உள்ளம் உயர்ந்தால் மனிதன் உயர்வான் . உள்ளம் உயர்வதற்கு இறைவழிபாடு அவசியமாகிறது . பக்தி என்பது வெறும் ஆசாரம் , அனுஷடானம் , பாக்களை மனனம் செய்தல் என்பன மட்டுமே ஆகாது . மனத்தை தூய்மை ஆக்குவதே பக்தி. 

                     " கிருதயுகத்தில் ஞானத்தினால்  முக்தி, 
                       திரேதாயுகத்தில் தானத்தினால் முக்தி,
                       துவாபரயுகத்தில் யாகத்தினால் முக்தி,
                       கலியுகத்தில்  பக்தியினால் முக்தி " 

                     "உய்ய வல்லார்கட்கு  உயிர்சிவ ஞானமே 
                      உய்ய வல்லார்கட்கு உயிர்சிவ தெய்வமே 
                      உய்ய வல்லார்கட்கு ஒடுக்கம் பிரணவம் 
                      உய்ய வல்லார் அறிவு உள்ளறி வாமே " 

 என்ற திருமூலர் வாக்கினை உணர்ந்து , மெய் அறிவு தெளிந்து  ஞானம் பெறுவோம் !! 

No comments: