Monday, March 5, 2018

தாய்மொழியை மெச்சிடுவீர் !


பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த அகரம் நீ !
ஆரியம் அசைக்க  முயன்றும்  அசையா சிகரம் நீ !
ழகரம் என்பது  எம் மொழியின் சிறப்பு 
திராவிட மொழிகள் அனைத்தும் இவளின் வளர்ப்பு ! 

'பூ' என்றால் உதடுகள் அழகாய் பூத்திடும் 
'முத்தம்' என்றதும் இதழ்கள் ஒன்றாய் குவிந்திடும் 
சொற்களின் ஓசையிலேயே அதன் காரணம் -இவளின் 
சொல்வளம் அதை நாம் சொல்லிமுடிப்பது எங்ஙனம் ! 

ஒற்றை எழுத்துக்கள் கூட பொருள் தரும்
ஒரு சொல்லே பல அர்த்தங்களையும்  அள்ளித்தரும்
எம் மொழியின் நயமதை என்ன சொல்லும் மனம்
தமிழை அமிழ்தினும் மேல் என்றாலும் மிக்க தகும் !

ஒழுக்கம், வீரம், ஈகை - வாழ்க்கைக்கு காட்டிய வழி
களவிற்கும் கற்பிற்கும் கூட இலக்கணம் சொன்ன மொழி
வாழ்வில் இடறுகையில் மனதில் ஒலித்திடும் ஓர் குரல்
அது அய்யன்  வள்ளுவன் அள்ளித்தந்த திருக்குறள் !

அறிவியல் , இணையம் என இவள்  வளர்ந்தென்ன நிதம்
வேர் கொண்ட மரத்தில்  புது கிளைகள்முளைப்பதா கடினம் ?
துறைதோறும் தமிழின் புகழ் பரவும் என்பது நிச்சயம் 
ஹார்வர்ட் அரியணையிலும்  இவள் அமரப்போவது  சத்தியம்!

தாயைக் காத்தல் மானுடர்க்கு  கடனாம்
மொழியைப் போற்றுதல் நம் உயிர்க்கு நிகராம் 
நாமே  நம்மொழியை  புறக்கணித்தல் பிழையாகும் - அது
விளக்கின் அடியில் குவியும் இருளுக்கு ஒப்பாகும் !

அடுத்த தலைமுறைக்கு மொழியைக்  கொண்டு சேர்ப்போம்
ஹார்வர்ட் இருக்கைக்கு நிதியை  அள்ளிக் கொடுப்போம்
திக்கெட்டும் ஓங்கட்டும்   எம் மொழியின் மாட்சி
அறநெறி வழுவாது மானுடத்தை காத்திடும் இவள் ஆட்சி !!

Monday, October 30, 2017

தாய்க்கு நிகர் தாய்மொழி !



                       

" கரும்பு தந்த தீஞ்சாறே , கனி தந்த நறுஞ்சுளையே ,கவின் முல்லை 
அரும்பு தந்த வெண்ணகையே அணிதந்த  செந்தமிழே  அன்பே  "  என்கிறார் பாரதிதாசன் .  
         அப்பப்பா  என் தாய்மொழி தமிழில்  தான் எத்தனை இன்பம் , எத்தனை சுவை . உலகத்தின் மிகச்சிறந்த மொழியான தமிழ், என் தாய்க்கு நிகரான மொழி .    

               குழந்தை பிறந்தவுடன் அறியும் முதல் உறவு தாய் தான்.  தாய் சொல்லி தான் குழந்தை, உலகத்தை அறியும்.   ஒரு தாய், தன் தாய்மையை முழுமையாய் உணரும் தருணம் எது தெரியுமா?  தன் செல்வச் குழந்தை தன்னை  "அம்மா " என்று அழைக்கும் தருணமே.  இப்படி தாய்க்கும் சேய்க்கும்மான உணர்வோடும்  ,நம்  ஒவ்வொருவரின் வாழ்வோடும் கலந்திருப்பது தம் தாய்மொழி தான்! 

           குழந்தை முதலில் கேட்கும் இசையும கூட தாய் பாடும் தாலாட்டு தான்  . "தால்"என்றால்  நாக்கு , நாக்கை அசைத்து பாடுகின்ற பாடல் ஆதலால்  "தாலாட்டு"என்று  ஆனது. இன்று  New Born, Infant , Toddler  என்றெல்லாம் சொல்கிறோமே , இதை நம் முன்னோர்  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே , காப்பு, செங்கீரை,தால் ,சப்பாணி ,முத்தம்,வருகை,அம்புலி,சிற்றில்,சிறுபறை ,சிறுதேர்   என்று குழந்தையின் வளர்ச்சி பருவங்களை  வகை படுத்தி உள்ளனர்.

                   ஏன் மொழிக்கு தாய்மொழி என்று பெயரிட்டான் ?  சற்றே சிந்திப்போம்.  வாழ்வில் மற்ற எல்லா உறவுகளும் மாறிவிடும், இன்றைய நண்பன், நாளையே  பகைவனாவான் . ஆனால் தாய் என்ற உயிர் மட்டுமே ,அதே தன்னலமற்ற அன்புடன் நம்மோடு இறுதி வரைக்கும்  வருவாள்.  தாய் மட்டும் தான் ஒரு குழந்தையை  செவ்வனே உருவாக்க முடியும். தாய்மொழி அவளால் அறியப்படுகிற மொழி மட்டும் அல்ல , அவளால் மட்டுமே அந்த  மொழியை பிழையின்றி தன் பிள்ளைக்கு கொண்டு சேர்க்க முடியும்.  ஆதலின் மொழியை ஒழுங்காய்  பிள்ளைக்கு கொண்டு சேர்க்கும் மிகபெரிய பொறுப்பும் தாயிடம் இருந்து தான் தொடங்குகிறது.  ஆனால் , இன்று தாய்மார்களே தங்கள் குழந்தைகள் தங்களை   "Mummy  "  என்று  அழைக்க சொல்வது தான் அவலம் .    குழந்தைக்கு   "anushka, hansika  "    என்று  புரியாத நடிகைகளின் பெயரை வைப்பதை காட்டிலும் நல்ல தமிழ் பெயர்களை சூட்டுங்கள் .  உங்கள் பிள்ளையோடு சேர்ந்து மொழியும் பல 100 ஆண்டு வாழும்.   மிகபெரிய அற நூல்கள் நம் மொழியில் தான் உண்டு.  பிள்ளைகளுக்கு நம் பரம்பரியதையும், மொழி பாடல்களையும் ,நீதி கதைகளையும் சொல்லி கொடுங்கள்.   என்ன தான் ஆங்கில புலமை பெற்றாலும், அது சொன்னதை சொல்லும் கிளிக்கே ஒப்பாகும். கிளியின் பேச்சுத்  திறமை பூனை வரும் வரை மட்டுமே ,பூனை யை  கண்டதும்   "கீச் கீச்   " என்று தான் அலறும் .  ஆதலால் நாம் , தமிழ் மொழி ஒதுக்கி பிறமொழி புலமை  பெறுவது அந்த கிளிக்கே  ஒப்பாகும். 

           தமிழ் என்பது வெறும் மொழியல்ல , நம் உணர்வோடு கலந்தது . தாய் கூட நாம் சாகும்வரை  நம்மோடு வருவதில்லை , ஆனால்  தாய் மொழி பிறப்பு முதல் இறப்பு வரை நம்மோடு வரும். மொழியின் வளர்ச்சி வீட்டில் இருந்து தான் தொடங்கும். ஆகவே பிள்ளைக்கு தமிழை சொல்லிகொடுங்கள் ,அவன் , நாளை பெற்றவர்களையும் , தாய்மொழியையும்   அனாதை இல்லங்களுக்கு அனுப்பமால் காப்பாற்றுவான் !  

        "தேன் ஒக்கும் செந்தமிழே  நீ தான் கனி ,நான் உந்தன் கிளி. என்ன வேண்டும் இனி  " ?. தினம்தோறும் தமிழ்த்தேனை சுவைப்போம்.  தமிழ் நம் அடையாளம் ,தமிழ் என் தாய் . தமிழ் என்  உயிர்க்கு நேர் ! 

பாப்பாவும் பொம்மையும் !

தாலாட்டு பாட தாய்க்கும் நேரமில்லை 
கைகோர்த்து விளையாட கூட்டாளி யாருமில்லை 
அண்ணனோ அக்காவோ யாரோடும் பிறக்கவில்லை 
விளையாட உன்னையன்றி என்னோடு ஒருவரில்லை 

அம்மா கொஞ்சம் நவீனமாகி வேலைக்கு சென்றுவிட்டாள் 
அப்பாவோ செல்வம் சேர்க்க தேசமெங்கும் சுற்றிவிட்டார் 
காக்கா  கதை சொல்ல தாத்தா பாட்டி இல்லை 
அபார்ட்மென்ட் வாழ்க்கையில் அக்கம் பக்கம் ஆட்களில்லை 

பரப்பரப்பான வாழ்வின் பரிசு இதுதான் கண்ணா 
கசப்பான உண்மை  இதை உணர்ந்துவிடு கண்ணா 
தனிமையை இப்போதே பழகிக்கோள் கண்ணா 
தாயின்றி போனாலும் காவலுக்கு நானிருக்கேன் 
கலங்காதே நீ கண்ணுறங்கு கண்ணா  !! 

கனத்த அடி வயிறு !

வெளியில் கிளம்பும் போதெல்லாம் ஒரு நெருடல்
நீண்ட நேர கோயில் வரிசைகளிலும் ,
நாள் முழுக்க செய்யும் ஷாப்பிங்கின் போதும்
அடி வயிறு கனக்கிறது
ஒவ்வொரு ஹோட்டலிலும் அதற்கான அறை இருக்கிறதா என்று தேடுகிறேன்
யாரிடம் கேட்பது என்ற கூச்சம்
வீட்டைபூட்டும் முன்பும் கூட ஒரு முறை போய் வந்தேனே
ச்சே தண்ணீர் குடித்திருக்க கூடாதோ?
இந்த மாதிரி எந்த பதட்டமும் இல்லாமல்
நாள் முழுக்க என்னோடு பயணிக்கிறார்கள்
என் கணவனும் , மகனும் !!

ரயில் பயணம்!




கடந்தது செல்லும் மரங்கள் ,
அவ்வப்போது கீரிச்சிடும் சப்தம் ,
எதிரே இருப்பவர் நாளிதழ் கடந்தருவார் ,
கூவி விற்கும் பண்டங்கள் சொல்லிவிடும் அடுத்துவரும் நிலையத்தை,
மனதை மயக்கிவிடும் பக்கத்தில் இருக்கும் பாப்பாவின் சிரிப்பு ,
இலவசமாய் காதில் விழும் அடுத்தவர் குடும்பக்கதை ,
அப்துல் , அர்ஜுன் இருவரின் செருப்பும் இருக்கையின் அடியில் ஒன்றாய்சேர்ந்துகிடக்கும் ,
வேற்று மொழிக்காரரிடம் அவர் மொழியில் ஓரிரு வார்த்தை பேசிவிட்ட பெருமை பூக்கும்,
பெரிய தொட்டிலில் அத்தனை குழந்தைகளையும் தாலாட்டும் தோரணை,
ரயில் பயணம் வெகு சுகம் தான்
மறுநாள் காலையில் அவசரமாய் பெட்டியின் கழிப்பறைக்கு செல்லும்வரை !!


ஆடை !!




நவநாகரீக உடை அணிந்தாள் 
அவள் ஒழுக்கம் விமர்சிக்கப்பட்டது.
லெக்கிங்க் உடுத்தினாள் அதை 
ஆபாசம் என்று பத்திரிக்கை படமெடுத்தது.
சுடிதாரின் மேல்துண்டு சரியும் போதெல்லாம் 
ஒரு ஜோடி கண்களேனும் அதை ஊடுருவி பார்த்து விடுகின்றன.
இரவு உடையில் வாசல் வரை வந்துவிட்டாள்
அது இரவிற்க்கானது மட்டுமே என்ற இலக்கணம் போதிக்கப்பட்டது.
அடக்கமாய் சேலை அணிந்தாள்
பேருந்தில் ஒரு கை லாவகமாய் அவள் இடையை தடவியது
கோபமாய் பேருந்திலிருந்து இறங்கினாள் .
சாலையோரம்,
முழுபோதையில் கிட்டத்தட்ட நிர்வாணமாக குடிமகனும்,
நிர்வாண நாயொன்றும் கிடந்தன .
அவர்களை துளியும் சட்டை செய்யாமல்
பெண்கள், வெகு இயல்பாகவே அவர்களை கடந்து சென்றார்கள் !! 

Saturday, August 15, 2015

சங்க இலக்கியத்தில் தாவரங்கள் !

    

                   மக்கள் இன்பம் அடைவதற்கு பல வழிகள் இருப்பினும் பொன்னாலும், பொருளாலும் பெரும் இன்பத்தை காட்டிலும் இலக்கிய இன்பம் தன்னிகரற்றது .பழந்தமிழர் மிகுந்த ரசனையோடு வாழ்ந்தார்கள் என்பதற்கு அவர்கள் நமக்கு அளித்த இலக்கியமே சாட்சியம். அவர்கள் இயற்கையோடு இணைந்த இயல்பான வாழ்வை வாழ்ந்திருக்க வேண்டும். இயற்கையை  ரசித்ததோடு அன்றி,அவற்றை பாதுகாக்கும் குறிப்புகளை இலக்கிய நூல்கள் தோறும் காண முடிகிறது. சங்க இலக்கியத்தில் , நீர்நிறைந்த ஆறுகளையும்,நிழல் அமைந்த சோலைகளையும்,தண்ணிலவையும் காண முடிகிறது.சங்க இலக்கியத்தில் தாவரங்கள்,செடிகொடிகள் பற்றிய பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன .


               
சூழ்நிலை,தட்பவெப்பம்,மழை ஆகியவற்றை கொண்டே நிலங்கள் பகுக்கப்பட்டன.இவ்வாறான நிலங்களில் மரம்,பூ முதலியவற்றின் பெயர்களை வைத்துதான் அகத்திணைகள் ஐந்தும் ,புறத்திணைகள் பன்னிரண்டும்  பெயர் இடப்பட்டன.குறுஞ்சிப்பூ 12 ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும் என்று சங்க நூலில் கூறப்பட்டுள்ளது. அழகிய வெள்ளை முல்லை பூவினை கற்பிற்கும் ,பெண்களின் புன்னகைக்கும் உவமை ஆக்கினர். முல்லை கொடி படர , தான் ஏறிச்சென்ற தேரை அதற்கு தந்தான் பாரி.

" சிறுவீ முல்லைக்கு பெருந்தேர் நல்கிய 
பரம்பிற் கோமான் பாரி 

என்ற வரிகள் செடிகொடிகளுக்கு அளித்த உயரிய இடம் புலன் ஆகிறது.

                மேலும் பழங்காலம் தொட்டே மா,பலா ,வாழை ஆகியவற்றை முக்கனிகளாக சேர்த்து அத்தகைய விருந்தை அரசர்க்குரிய விருந்தாக கருதி வந்தனர்.மருதம்,கொங்கு,வேங்கை , மூங்கில் போன்ற மரங்களை வைத்து பறை போன்ற கருவிகள் செய்தனர்.மூங்கில் மரத்தினை பெண்களின் தோளுக்கு உவமித்து " ஆடுமை புரையும் வனப்பிற் பணைத்தோள் பேரமர்க் கன்னி "  என்று குறுந்தொகை கூறுகிறது. கபிலர் 99 பூக்களை குறுஞ்சி நிலத்தில் இருப்பதாக குருஞ்சிப்பட்டில் குறிக்கிறார்.


"வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ்தொத்து உந்தூழ், கூவிளம்,
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்
தாழை, தளவம், முள் தாள் தாமரை
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்
அரக்கு விரிந்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலி வனம் மறுகி
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇ" .

                      வேங்கை மலர்கள் குறுஞ்சி நிலத்திற்குரிய அழகிய மலர்கள்.அது பூக்கும் பருவம் திருமணம் நிகழ்தற்குரிய அழகிய மலர்கள். அது பூக்கும் பருவம் திருமணம் நிகழ்த்திற்குரிய பருவமாக கருதப்பட்டது. இயற்கையுடன் அளவளாவிய தமிழ் மக்கள் வேங்கை மரத்தின் நிழலில் திருமணங்களை நடத்தி வந்தனர். புன்னை,இலுப்பை வேம்பு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்டது.  பாலை நிலத்தில் காணப்படும் முருக்கம் என்ற மரம் சங்க இலக்கியத்தில் பாடப்பட்டுள்ளது.ஒரே சிவப்பாக இம்மரம் பூத்து குலுங்கும் பொது காடு பற்றி எரிவது போல் தோன்றுதலால் இம்மரம் "காட்டுத்தீ " என்று பெயர்ப்பெற்றது.இதன் சிவந்து வளைந்த பூவை கண்ட காளிதாசர் சிவந்த கிளி மூக்கிற்கு ஒப்பிட்டுள்ளார்.அகநாநூற்று பாடல் இதன் அரும்பு உதிரம் தோய்ந்த புலிநகம் போல உள்ளது என்பதனை 

 " செம்பூ முருக்கி னனன்னார் களைந்து 
  தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்து

என்ற குறுந்தொகை பாடலில் காணலாம்.

 "உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்குபனை போல்வரே 
 மதிமர்தாந தென்குதனை மானுவரே முத்தலரும் 
ஆங்கமுகு போல்வார்தாம் ரவர்களே 
தேங்கதலி யும்போல்வார் தேர்ந்து " 

 என்ற பாடலில்,  நீர் சிறிதளவே எடுத்தாலும் மிகுந்த பயன் அளிக்கும்  பனை மரத்தை மேலோர்க்கும், எடுக்கும் நீரளவு பயன் தரும் தென்னையை மத்திமோர்க்கும் ,கொடுக்கும் பலனை காட்டிலும் மிகுதியாக நீரை எடுத்துக் கொள்ளும் கமுகு மரத்தை கீழோருக்கும் உவமை ஆக்கிப்பாடியுள்ளார்

                சங்க இலக்கியத்தில் மரங்கள் மட்டும் இன்றி செடி கொடிகளையும் பலவராக பாடியுள்ளனர். பொதுவாக கொடியை பெண்களின் சிற்றிடைக்கு உவமை கூறுவார்.காந்தள் மலரை உற்று நோக்கிய கவிஞர், அதன் இதழ்கள் குவிந்து இருப்பது இறைவழிபாடு செய்யும் மகளிரின் குவிந்த கைப்போல் கவின் செய்கிறது என்கிறார்.மாலைப்போழுதில் அதன் தோற்ற்றம் இயற்கை மகள் ஏற்றும் விளக்கு போல் விளங்குகிறதாம்.அதன் இதழ்கள் அரக்கு வளையல்களை உடைத்தது போன்றும், அதன் இலைகள் கள்ளை மிகுதியாக உண்டு மயங்கித் திரியும் களியர்க்கு ஒப்பிடுகிறார்.

              புலவரும்,கூத்தரும் ,பாணரும் அரசர்பால் செல்லும்போது அவர்கட்கு பரிசலாக நாடும் ,ஊரும் நல்குவதுடன் பொன்னால் செய்த தாமரைப் பூவினை அளிப்பதும் வழக்கம். சில வேளைகளில் வெள்ளி நாரினால் கட்டிய பொற்ப் பூங்கொத்தை பரிசில் நல்குவர் . மேலும் சேர மன்னருக்கு பனம்பூவும் , சோழ மன்னருக்கு அத்திப்பூவும் , பாண்டியர்க்கு வேப்பம்பூவும் அடையாளமாக விளங்கியது.

               மலையாள நாட்டில் இன்றும் விஷுக்கனி என்ற பண்டிகையில் செப்பில் அரிசி,பலாப்பழம் ஆகியவற்றை வைத்து அதன்மேல் கொன்றை மலர்களை பரப்புவர். கொன்றை மலர்களை பார்த்தால் வளம் கொழிக்கும் என்பது அவர்கள் நம்பிக்கையாக இருந்து வருகிறது

" கார்விரி கொன்றை கலந்த கண் நுதலான்

என தேவாரத்தில் ஞானசம்பந்தர் பாடுகிறார். மென்மையும் அழகும் வாய்ந்த பூவிற்கு நிகராக பெண்ணை கருதி " பூவை " என்று பெண்களை குறித்தனர் .அக்கால விழாக்களில் கமுகு மரம், வாழைமரம் ,வஞ்சியும் , பூங்கொடிகளும் அழகு செய்ய பயன்ப்பட்டது. இன்றும் கூட திருமணங்களில் வெற்றிலையும் ,பாக்கும் ,வாழைமரமும் , மஞ்சளும் பெரும்பங்கு வகிக்கின்றன .திருமணத்தில்அரசாணிக்கால்"  நடுதல் என்ற வழக்கம் சங்ககாலம் முதல் இருந்து வருகிறது.  கோவில்களில் மரங்களைஸ்தல விருட்சம்" என்றும் மரங்களை கடவுளரின் திருவுருவங்களாகவும் வழிப்பட்டு வருகின்றனர். இவை யாவும் அவர்கள் மரங்களையும் , செடி கொடிகளையும் எவ்வாறு பேணி காத்தனர் என்பதற்கு சான்று

                  இன்றைய  நவீனமயமாக்கலில் நாம் காடுகளையும் , இயற்க்கை வளங்களையும் இழந்து விட்டோம்.  முன்னோர்கள் பேணிக்காத்த இயற்க்கை வளங்களை பாதுக்காக்க தவறிவிட்டு இன்று செயற்கை வாழ்வில் சிக்குண்டு கிடக்கிறோம். மரங்களை வெட்டிவிட்டு குளிர்சாதன பெட்டிகளை வாங்கும் மூடர்களை  கண்ணை விற்று ஓவியம் வாங்குபவர்கள் என்றே சொல்ல வேண்டும் " வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் " என்ற வள்ளலார் வரிகளை இனியாவது உணரவேண்டும் . மரம், செடி ,கொடிகளின் பயன்களை உணர்ந்து மீதம் உள்ள மரங்களையாவது பாதுக்காக்க வேண்டும் . அடுத்த தலைமுறைக்கு வாழக்கூடிய உலகத்தை விட்டுச் செல்வோம்!!