Wednesday, February 26, 2014

நான் யார் ?

ஏழு வயதில் என் நண்பர்களுடன்
 உன் மேல் ஏறி நின்று ஆடியபோதெல்லாம்,
கீச் கீச் சென்று நீ சத்தம் இட்டாலும்
அதை சட்டை செயாமல் நான்
ஆடிய ஆட்டம் நீ அறிவாய்!!

பதினான்கு வயதில் என்னை வீட்டிலேயே
பூட்டி வைத்த போது
உன்னை உடைத்து நான் வெளியேற
நினைத்த ஆத்திரம்  நீ அறிவாய் !!

இருபத்தி ஒரு வயதில் காதலுற்ற போது
பலர் வந்து உன்னை தட்டும் போதல்லாம்
அவரோ என நினைத்து
துள்ளி குதித்து உன்னை திறந்த ஆவலையும்
அவரில்லை என்ற போது நான் அடைந்த
ஏமாற்றத்தையும் நீ அறிவாய் !!

என்னவன் வந்த போது,
அவன் முகம் பார்க்க ஆசை இருந்தும்
அத்தனையையும் அடக்கி ,
உன் பின்னால் என் பாதி உடல் மறைத்து
நான் தவித்த தவிப்பை நீ மட்டுமே அறிவாய் !!

ஊர் கூடி வாழ்த்திய பிறகு  ,
தோழிமார் என்னை தள்ளிய பின்
நாங்கள் இருவரும் அடையும் இன்பத்தை
யாருமே அறியாத போதும்
என் காதலையும் , நாணத்தையும்
நீ மட்டுமே அறிவாய் என் ஆருயிர் தோழி !!!

நட்பின் தூரம் !!

தூரத்தில் இருக்கிறது சூரியன்
உலகெங்கும் தன் தூரிகையால் ஒளிகூட்டி
எங்கோ சிரிக்கிறது வெண்ணிலா
தன் குளுமையால்  உயிர்களை தாலாட்டி
புதரில் பூத்திருக்கும் தாழம்பூ
சுற்றமெங்கிலும் தன் மணம்பரப்பி
மலை உச்சியின் ஒற்றைமரம்
சுமந்திருக்கும் நனிசுவை கொண்ட தேன்கூட்டை
எங்கோ இருக்கிறாய் நீ -நம்
நட்பின் சுவையை மென்மேலும் கூட்டியபடி
நட்பிற்கு தூரம்ஒரு பாரம் இல்லையென்று
நினைத்தபடி அண்ணார்ந்து பார்த்தேன்
விமானம் ஒன்று என்னை கடக்கிறது , பயணிகளையும்
என் மனதையும் நீ இருக்கும்
இடம்நோக்கி சுமந்தபடி !!

தாயே நீ வாழி !

நீ திட்டிஇருக்கிறாய் -  நான் அழுதிருக்கிறேன் ;
மறு நொடி, கேட்டது தருவாய் -  உடனே சிரிப்பேன்..
உன் உணவினை குறை சொன்னேன், தூக்கி எறிந்தேன் ;
உடனே வேறு சமைப்பாய், பசி ஆறினேன். 
நான் படிப்பேன், நீ கண்விழிப்பாய் , 
எட்டி உதைத்தேன் , கட்டி புரண்டேன் , 
ஆனாலும் உன் முந்தானை பிடித்தே தூங்கி இருக்கிறேன்.. 
அப்போது மட்டுமே  நிம்மதியாய்  நான் உறங்கி இருக்கிறேன் ..
திரும்பி பார்த்தால் , உன்னோடு மட்டுமே நான் உண்மையாய் வாழ்ந்திருக்கிறேன் ..
என் முதல் , கடைசி காதல் இருண்டுமே நீ மட்டும் தான் என்று இன்று உணர்கிறேன் .. 
அருகில் இருந்தாய் அருமை புரியவில்லை. , பெருமை உணர்ந்தேன் அருகில் நீ இல்லை.. 
எங்கோ இருக்கிறாய் நீ...
என்  உயிர் தாயே என்றும் நீ  வாழி !