பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த அகரம்
நீ !
ஆரியம் அசைக்க முயன்றும்
அசையா சிகரம் நீ !
ழகரம் என்பது எம் மொழியின்
சிறப்பு
திராவிட மொழிகள் அனைத்தும் இவளின்
வளர்ப்பு !
'பூ' என்றால் உதடுகள்
அழகாய் பூத்திடும்
'முத்தம்' என்றதும் இதழ்கள் ஒன்றாய்
குவிந்திடும்
சொற்களின் ஓசையிலேயே அதன்
காரணம் -இவளின்
சொல்வளம் அதை நாம்
சொல்லிமுடிப்பது எங்ஙனம் !
ஒற்றை எழுத்துக்கள் கூட பொருள் தரும்
ஒரு சொல்லே பல அர்த்தங்களையும் அள்ளித்தரும்
எம் மொழியின் நயமதை என்ன சொல்லும்
மனம்
தமிழை அமிழ்தினும் மேல் என்றாலும்
மிக்க தகும் !
ஒழுக்கம், வீரம், ஈகை - வாழ்க்கைக்கு காட்டிய வழி
களவிற்கும் கற்பிற்கும் கூட
இலக்கணம் சொன்ன மொழி
வாழ்வில் இடறுகையில் மனதில்
ஒலித்திடும் ஓர் குரல்
அது அய்யன் வள்ளுவன் அள்ளித்தந்த திருக்குறள் !
அறிவியல் , இணையம் என இவள் வளர்ந்தென்ன நிதம்
வேர் கொண்ட மரத்தில் புது கிளைகள்முளைப்பதா கடினம் ?
துறைதோறும் தமிழின் புகழ் பரவும்
என்பது நிச்சயம்
ஹார்வர்ட் அரியணையிலும் இவள் அமரப்போவது சத்தியம்!
தாயைக் காத்தல் மானுடர்க்கு கடனாம்
மொழியைப் போற்றுதல் நம் உயிர்க்கு
நிகராம்
நாமே நம்மொழியை
புறக்கணித்தல் பிழையாகும் - அது
விளக்கின் அடியில் குவியும்
இருளுக்கு ஒப்பாகும் !
அடுத்த தலைமுறைக்கு மொழியைக் கொண்டு சேர்ப்போம்
ஹார்வர்ட் இருக்கைக்கு நிதியை அள்ளிக் கொடுப்போம்
திக்கெட்டும் ஓங்கட்டும் எம் மொழியின் மாட்சி
அறநெறி வழுவாது மானுடத்தை காத்திடும்
இவள் ஆட்சி !!