விமானம் புறப்பட இன்னும் 5 மணி நேரமே இருந்தது .வீட்டில் ஒரே பரப்பரப்பு .அம்மா...பொடிஎல்லாம் ரெடியா ? கேட்டபடியே கிளம்பிகொண்டிருந்தான் கணேஷ். எல்லாம் ரெடிப்பா என்று குரல் கொடுத்தாள் அம்மா, சமையல் அறையில் பரப்பரப்பாய் ஏதோ செய்தபடி .சார் !, பையன் ஊருக்கு போறானே ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்னு வந்தேன் சொல்லி கொண்டே உள்ளே நுழைந்தார் பக்கத்துக்கு வீடு சுப்பு மாமா .வாங்க சார் என்று அழைத்து அமர சொன்னார் அப்பா. எப்படியோ சார் கிரிக்கெட் அது இதுனு சும்மா சுத்திட்டு இருந்த உங்க பையனாய் நல்ல படியா இன்ஜினியரிங் படிக்க வச்சி , இப்போ வெளிநாடும் போறான் . ரொம்ப பெருமையா இருக்கு, நீங்க பிள்ளைக்கு நல்லா வழி காம்பிச்சி இருக்கீங்க என்றார் மாமா . கண்களில் பெருமிதம் பொங்க சிரித்தார் அப்பா,லேசாய் தன் மீசையை தடவியபடி . என் பையனுக்கு இப்போ தான் புத்தி வர போகுதோ . வாழ்க்கையில் பட்டாதான் அவனுக்கு புரியும் போல என்று தன் மகன் மணியை நினைத்து புலம்பினார் மாமா.கணேஷ், டைம் ஆச்சுப்பா . வண்டி வந்தாச்சு என்று குரல் கொடுத்தார் அப்பா . கணேஷ் ரெடி ஆகி தன் அறையில் இருந்து வந்தான் . மாடியிலிருந்து கீழிறங்கி வந்து சமையல் அறையில் நுழைந்தான் .. கண்கள் சிறிது கலங்கியபடி, சாமி படங்களின் முன் நின்று இருந்தாள் அம்மா . நான் கிளம்புறேன்ம்மா.. உடம்ப நல்லா பார்த்துக்கோ , என்று சொல்லிய படியே அம்மாவின் தோளில் கை வைத்து அவளை அறுதல் படுத்த முயன்றான் . என்னமோப்பா, நான் கும்பிடற முருகன் தான் உனக்கு நல்ல வழி காண்பிச்சி ,இந்த வேலைய வாங்கி கொடுத்து இருக்கான் . நல்ல படியா போயிட்டு வா, எங்களை பத்தி கவலை படாதே நீ, அங்க போய் நல்லா வேலை பார்த்து பேர் எடுக்கணும் . டைம் கிடைக்கும் பொது நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ , கிரிக்கெட் அது இதுனு வெயில்ல சுத்தாதே . செரிம்மா அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் என்று சொல்லிய படியே அவசரமாய் பெட்டிகளை எடுத்தான் .எல்லா பெட்டிகளையும் வண்டியில் ஏற்றியாகி விட்டது . கண்கள் கலங்கிய படி வாசலில் நின்றாள் அம்மா. வண்டியில் வந்து ஏறுப்பா டைம் ஆகுது என்று சொன்னார் அப்பா. அம்மாவிடம் பிரியா விடைசொல்லி வண்டியில் ஏற எத்தனித்தான் கணேஷ் . திடீர் என்று ஒரு பந்து வந்து மண்டையில் பட்டது .பந்தை எடுக்க ஓடி வந்தான் தெருவில் விளையாடி கொண்டிருந்த ஒரு சின்ன பையன் . அண்ணா, நீங்களும் ஒரு ஓவர் விளையாட வரீங்களா? என்றான் அவன். நீங்களே வேணாலும் பேட்டிங் பண்ணுங்க என்று கெஞ்சலாய் கேட்டான் . டேய் , அண்ணா ஊருக்கு போறான் டைம் ஆச்சு நீ விளையாட கூப்பிடறியா என்று அதட்டினார் அப்பா .சரிஅண்ணா , வரும் பொது என்னக்கு ஒரு நல்ல பேட் வாங்கிட்டுவா என்று சொல்லியபடி ஓடிப் போனான் .
ஏக்கத்தோடு அவனை பார்த்தபடி வண்டியில் ஏறினான் கணேஷ் . கண்களின் ஓரமாய் சில நீர் துளிகள் எட்டிப்பார்த்தது .வெளியூர் போகும் பொது அழக்கூடாது ,எங்கள விட்டு பிரிஞ்சி போறேன்னு வறுத்த படாதே என்று கார் கண்ணாடியின் வழியே தலையை உள்ளே நுழைத்து சொன்னாள் அம்மா.
நீ வாழ்க்கையில் பெரிய ஆளா வருவப்பா " ஆல் தி பெஸ்ட் " என்று கை குலுக்கினார் அப்பா.
தன் வாழ்க்கை என்பது என்ன என்று யோசித்தபடியே காரின்சைட் கண்ணாடியை பார்த்தான்.
டேய் "புடிடா ,விடாதே புடிடா " என்று சிறுவன் கத்திக்கொண்டே ஆனந்தமாய் விளையாடுவது தெரிந்தது .வண்டி நகர நகர சிறுவனும், தான் நேசித்த கிரிக்கெட்டும் தூர விலகிக்கொண்டே போனது. ..
அவனுக்காவது கனவு மெய்ப்படட்டும் என்று நினைத்த படி தன் கண்களை துடைத்து கொண்டான் கணேஷ் .
அப்போது திடீரென்று ஏனோ மேகம் மெல்லியதாய் கசிய தொடங்கியது.